மலை ரயிலில் பயணம்...இவ்வளவு கட்டணமா?

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலை ரயில், இங்கிலாந்து நாட்டு தம்பதிகளுக்காக மட்டும் இன்று இயக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிராகாம்வில்லியம்-சில்வியாபியோசிக் தம்பதி. கிராகாம்வில்லியம் என்எச்எஸ் மருத்துவமனையில் பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், பல்வேறு நாடுகளில் உள்ள சிறப்பு ரயில்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.    இந்த தம்பதியை ஊட்டி மலைரயில் மிகவும் ஈர்த்துள்ளது. அதில் பயணம் செய்ய முடிவு செய்த இந்த பயணிகள் இந்திய ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கட்டணம் குறித்து விசாரித்துள்ளது. ஒருமுறை சென்று வர இருவருக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் கட்டணம் என தெரிவிக்கப்பட்டது.    உடனடியாக கட்டணத்தை கட்டிய இங்கிலாந்து தம்பதி, அந்த நாட்டில் இருந்து விமானமூலம் சென்னை வந்தனர். சென்னையில் இருந்து நீலகிரி விரைவு ரயில் மூலம் மேட்டுப்பாளையம் சென்றடைந்தனர். அங்கு மலை ரயில் சிறப்பு குறித்து ரயில்நிலைய மேலாளர்கள் வேதமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தம்பதிக்கு விளக்கம் அளித்தனர்.   மலை ரயில் முன் நின்று வெளிநாட்டு தம்பதி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. கொள்ளை கொள்ளும் இயற்கை அழகை ரசித்தபடி அந்த தம்பதி ஊட்டி சென்றடைந்தனர்.    153 பேர் பயணம் செய்யும் மலை ரயில், 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி 2 பேர் மட்டுமே பயணம் செய்தது, ரயில் பயணிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
More News >>