தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது அமெரிக்கா சென்று அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்கா சென்ற அவர் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னை திரும்பினார்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விஜயகாந்த் தமது 66-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இதுதொடர்பாக, அவரது உறவினரும் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறுகையில், "வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்" என பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.