ஆசிய விளையாட்டு: படகுப் போட்டியில் ஜொலித்த இந்தியா
18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13வது நாளான வெள்ளியன்று இந்தியா எந்த விளையாட்டிலும் தங்கப் பதக்கம் பெறவில்லை.
பாய்மரப் படகுப் போட்டியில் (49இஆர் எஃப்எக்ஸ் பிரிவு) இந்தியாவின் வர்ஷா கௌதம், ஸ்வேதா ஷெர்வேகர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். ஹர்ஷிதா டோமர் ஓப்பன் லேசர் 4.7 போட்டியில் வெண்கலமும், 49இஆர் பிரிவில் தாக்கர் அசோக் மற்றும் செங்கப்பா கணபதி கேலபாண்டா வெண்கலமும் வென்றுள்ளனர்.
பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியிடம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றதால், வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது.ஆண்கள் ஸ்குவாஷ் போட்டியில் ஹாங்காங் அணியிடம் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியுற்றது. எனவே, வெண்கலம் கிடைத்துள்ளது. குத்துச் சண்டையில் (75 கிகி பிரிவு) காயமுற்ற விகாஸ் கிருஷ்ணனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. தங்கம் எதுவும் புதிதாக வெல்லாத நிலையில் 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 65 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.