ஐடியா செல்லுலார் மற்றும் வோடஃபோன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்துள்ளன. இந்த இணைப்பின் மூலம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் இந்தியாவின் பெரும் தொலைதொடர்பு நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் சந்தையான இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் முடிவு கடந்த பிப்ரவரி மாதம் எட்டப்பட்டது. இந்த இணைப்பு ஏறத்தாழ 1.6 லட்சம் கோடி மதிப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் இணைந்த நிலையில் புதிய நிறுவனம் 40 கோடி வாடிக்கையாளர்களை கொண்டதாக விளங்குகிறது. சந்தையின் மொத்த வருமானத்தில் 40 சதவீத பங்கை இந்நிறுவனம் பெறும். முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு புதிய போட்டியாளராக இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது.
குமார் மங்கலம் பிர்லா இப்புதிய நிறுவனத்தின் தலைவராகவும், பாலேஷ் சர்மா, தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவர். 12 இயக்குநர்கள் இருப்பர். ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஹிமான்சு கபானியா அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். புதிய நிறுவனத்தில் செயல் சாரா இயக்குநராக அவர் தொடருவார்.