கேரளாவில் எலி காய்ச்சல்- 12 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எலி காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அங்கு வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால், சுகாதார அச்சுறுத்தல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.

சில இடங்களில் எலி காய்ச்சல் பரவிவருகின்றது. இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் தற்போது எலி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் கடும் பீதியடைந்துள்ளனர்.

More News >>