திமுக சார்பில் கேரளாவுக்கு நிவாரண உதவி

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் கிலோ அரிசி திமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இயற்கை பேரிடரில் சிதைந்த கேரள மாநிலத்திற்கு, பன்னாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு பிரித்து கொடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அரிசு, பருப்பு, போர்வை, துணிகள், மருந்துகள், வீடுகளை சுத்தம் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.   அந்த வரிசையில், திமுக சார்பில் கேரள மாநிலத்திற்கு நிவாரண உதவி அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தென் சென்னை மாவட்டம் சார்பில் 50 ஆயிரம் கிலோ அரிசி கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.   பின்னர் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம்,"வரலாறு காணாத கேரள வெள்ள பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் 1 கோடி நிவாரண நிதியாக அறிவித்தார். மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாதம் ஊதியத்தை கேரள நிவாரண நிதியாக ஒதுக்கி உள்ளனர்."   "அதுமட்டுமின்றி அனைத்து மாவட்ட நிர்வாகமும் தங்களால் இயன்ற உதவியை கேரளாவிற்கு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். அதன் அடிப்படையில், திமுக தென் சென்னை மாவட்டம் சார்பில் 2 ஆயிரம் மூட்டைகள் 25 கிலோ எடையுடைய கேரளா மக்கள் பயன்படுத்தும் சிவப்பு அரிசியை 2 லாரிகளில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
More News >>