புஜாரா சதம்... இந்தியா 273 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக பட்சமாக சட்டேஸ்வர் புஜாரா 132 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 257 பந்துகளை எதிர்கொண்டு புஜாரா எடுத்த 132 ரன்களில் 16 பவுண்டரிகள் அடங்கும்.

அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் விராட் கோலி 71 பந்துகளை சந்தித்து 46 ரன்களை பெற்றார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முகமது ஷமி இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்மிழந்தனர்.

இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 63 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் மொயின் அலியின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மற்றும் பும்ராவின் விக்கெட்டுகளை ஸ்டூவட் பிராட் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் 22 வது ஓவரில் தனது 9 வது ரன்னை எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அவர் விளையாடிய 70ம் டெஸ்ட்டில் 119வது இன்னிங்ஸில் இந்தப் பெருமை சாத்தியமானது.

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 65ம் டெஸ்ட்டில் 117வது இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>