அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மோசடி- பலே இந்திய சிஇஓ கைது

அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, தவறான தகவல் மற்றும் மோசடி ஆவணங்களை கொடுத்து வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வாங்கிய குற்றத்திற்காக இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்கள் அமெரிக்காவில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் பணியாற்ற விசா பெறுவதற்கு சரியான ஆவணங்கள் மற்றும் உண்மையான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அமெரிக்காவில் எந்த நிறுவனமும் வேலைக்கு அழைக்காமல், போலியான வேலைவாய்ப்பு கடிதங்களை கொடுத்து 200க்கும் மேற்பட்ட நபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் பிரத்யும்னா குமார் சமல் (வயது 49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் டிவன்ஸி (Divensi), அஸிமெட்ரி (Azimetry)என்ற இரு நிறுவனங்களை சியாட்டில் அருகே பெல்லேவ் என்ற இடத்தில் பிரத்யும்ன குமார் தொடங்கியுள்ளார். மென்பொருள் வல்லுநர்கள் போன்ற தொழில்நுட்ப பணியாளர்களை நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தும் பணியை இந்நிறுவனங்கள் செய்து வந்துள்ளன.

பெருநிறுவனங்கள் வேலைக்கு அழைத்தது போன்ற போலியான ஆவணங்களை விண்ணப்பங்களோடு சமர்ப்பிக்கும்படி சமர் அநேகரை வழிநடத்தியுள்ளார். நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் கையெழுத்துடன் வழங்கப்பட்ட போலி கடிதங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விண்ணப்பங்கள் அமெரிக்க குடிபுகல் மற்றும் குடியேற்ற துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசா வழங்கப்பட்டதும், பணியாளர்களை தனது நிறுவனத்தில் வைத்துக்கொண்டுள்ளார்.

வருபவர்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், பகுதி திரும்ப பெறக்கூடிய காப்புத் தொகையாக 5000 அமெரிக்க டாலர்கள் வரை விசா செலவுக்காக சமருக்கு வெளிநாட்டு பணியாளர்கள் கொடுத்து விட வேண்டும் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது. பெஞ்ச் அண்ட் ஸ்விட்ச் (bench-and-switch) என்று இத்திட்டம் கூறப்படுகிறது.

2015ம் ஆண்டு இவர்மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு விசாரணையில் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரத்யும்ன குமார் சமர், அமெரிக்காவை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

தற்போது அமெரிக்கா திரும்பிய அவரை சியாட்டில் விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர். இந்தியரான பிரத்யும்ன குமார் சமர், இரு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் விசா மோசடி குற்றத்திற்கு பத்து ஆண்டு வரை சிறைத்தண்டனையும் 2,50,000 டாலர் வரை அபராதமும் விதிப்பதற்கு இடமுண்டு.

More News >>