நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது - ராஜ்நாத் சிங்
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து மாநிலங்களின் சட்ட மன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியாகி வந்தது. இத்தகைய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று பேசப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை.
2019-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி வரை தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆட்சிகாலம் உள்ளது. உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும். மாறாக, முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை.
அதேபோல் நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆராயுமாறு கூறினார். இதைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.