அறுபது வயதில் பதக்கம் - உண்மை நம்புங்க!
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது.
இருபத்திரண்டு வயதான அமித் பங்கல், குத்துச் சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், பிரணாப் பரதன் (வயது 60), சிப்நாத் சர்கார் (வயது 56) இருவரும் இணைந்தும் ஒரு விளையாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
'பிரிட்ஜ்' என்ற உள்ளரங்க விளையாட்டு முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டில் ஜோடிகளுக்கான இறுதிப் போட்டியில் 384 புள்ளிகளைப் பெற்று இந்த இணை தங்கம் வென்றுள்ளது. ஏற்கனவே இதே விளையாட்டில் இந்தியா இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
பெண்கள் ஸ்குவாஷ் அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 2 - 1 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.