இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
ஐதராபாத்தில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி பிரபல கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இதில் மொத்தம் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அனிக்கு சையத், முகமது சாதிக், இஸ்மாயில் சவுத்ரி, அகமது பாட்சா மற்றும் தரீக் அஞ்சும் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் 2 பேர் தலைமறைவாகினர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு 170 சாட்சிகளிடம் விசாரணை, வாதங்கள் என கடந்த 7ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த வழக்குக்கான தீர்ப்பு வரும் செப்டம்பர் 4ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதன்ப, இந்த வழக்கு இன்று ஐதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அனிக் சையத், இஸ்மாயில் சவுத்ரி ஆகியோர் குற்றவாளிகள் என ஐதராபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர்களை தவிர இருக்கும், முகமது சாதிக், அகமது பாட்சா மற்றும் தரீக் அஞ்சும் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் செப்டம்பர் 10ம் தேதி (திங்கட்கிழமை) வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.