விடைத்தாள் மறுகூட்டல் மோசடி... நீளும் பட்டியல்
அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரத்தில், உதவி பேராசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை 4-வது நாளாக தொடர்கிறது.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில்,உதவிப் பேராசிரியர் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், உடந்தையாக இருந்த அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என 30 பேர் பெயர்களின் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
500 கேள்விகள் மற்றும் 200 துணைக் கேள்விகள் என மொத்தம் 700 என கேள்விகள் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர்களிடம் 4-வது நாளாக விசாரணை நீடிக்கிறது.
குறிப்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த உமா முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்துள்ளனர். "முறைகேட்டுக்கு உதவி செய்தால் பணம் கிடைப்பதுடன், பதவி உயர்வு, உயரதிகாரிகளின் நட்பு, பல்கலைக்கழகத்தில் வேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியதன் பேரிலேயே விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடிக்கு உடந்தையாக இருந்தோம்" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் உமாவுக்கு, ஆதரவாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் 3 பேர் , மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் கணிணி அறை பொறுப்பாளரின் பெயர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பணம் கொடுத்தஇடம், தேதி விவரப்பட்டியலையும் போலீசாரிடம் உதவி பேராசிரியர்கள் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து உமா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு சில தினங்களில் சம்மன் அனுப்பப்படும், கைது நடவடிக்கையும் இருக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியுள்ளனர்.