கேரளாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் பலி
கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மாநிலத்தையே புறட்டிப்போட்ட பேய் மழையின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், தற்போது எலி காய்ச்சல் மீண்டும் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.
கேரளா மாநிலத்தில் 13 மாவட்டங்களை பதம்பார்த்த மழை வெள்ளத்தால் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியால் எலி காய்ச்சல் என்ற தொற்று நோய் வேகமாக பரவ தொடங்கியது.
இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்த 842 பேரில் 372 பேருக்கு எலி காய்ச்சல் தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதற்கான தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
எலி காய்ச்சலால் சிகிச்சை பலினின்றி கடந்த வாரம் வரையில் 55 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால், நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.