அமலாபாலின் ஆடை...ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியாகியுள்ளது.
‘மேயாத மான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். ரொமான்டிக் காமெடிப் படமான இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘எங்க வீட்டு குத்துவிளக்கு' மற்றும் ‘தங்கச்சி'’பாடல்கள் இன்றுவரை எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து 2-வது படத்தை ரத்னகுமார் இயக்குகிறார்.
ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு ‘ஆடை'எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமலா பால் பிரதான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டார்.
அந்தப் போஸ்டரில், 'வெள்ளை நிற கந்தல் துணியில், அழுதுத் துடிக்கும் அமலா பாலின் கண்களில் கண்ணீர் வழிகிறது. இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது. விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை V-ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரதீப் குமார் இசையமைக்கிறார்.
இது குறித்து அமலாபாலிடம் கேட்டபோது, 'ஆடை' படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. 'ஆடை' சாதாரண படமும் அல்ல.இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களதும் ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும்.""இயக்குனர் ரத்னகுமரின் மேயாத மான் பார்த்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும் கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்தது.அவ்வளவு உணர்ச்சிகரமான கதை " என்றார் அமலா பால்.