குட்கா ஊழல்... 40 இடங்களில் சிபிஐ ரெய்டு!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து, கடந்த மே 30ஆம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடாத தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதற்கட்டமாக சிபிஐ அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை இடமிருந்து ஆவணங்களை பெற்றுக் கொண்டது.
கடந்த 3 மாதமாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை துவங்கியுள்ளது. சுமார் 12 மணி நேரம் நடந்த விசாரணையில் பல தகவல்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முகப்பேரில் உள்ள காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், மதுரவாயிலில் உள்ள முன்னாள் டிஜிபி ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோன் உள்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் இறுதியில், முழுவிவரம் தெரியவரும்.