சோபியா மீது வழக்கு... தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்
மாணவி சோபியா மீது வழக்குத் தொடுத்த தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாடெங்கும் மதவெறிப் போக்குடன் மனித உரிமைகளை நசுக்கி, சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை படுகொலை செய்யும் இந்துத்துவ சக்திகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து, மதச்சார்பின்மையை வலியுறுத்தும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மீது பொய் வழக்குப் போடும் போக்கு நீடிக்கின்றது.
இந்திய ஜனநாயகத்துக்கே உலை வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி, மாணவி சோபியா கருத்துத் தெரிவித்தது அவரது ஜனநாயக உரிமை ஆகும். அதற்காக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது கண்டனத்துக்கு உரியதாகும்.
இந்திய அரசின் மதவெறிப் போக்குக்குத் தமிழக அரசும் உடந்தையாகச் செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிக்றது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் கல்வி கற்று முன்னேறிய மாணவி சோபியா டெல்லியில் இளநிலை பட்டம் பெற்று, பின்னர் ஜெர்மனியில் எம்.எஸ்.சி., இயற்பியல் பட்டம் பெற்று, கனடாவில் எம்.எஸ்.சி., கணிதம் படித்து முடித்து தற்போது கனடா மாண்ட்டிரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகின்றார். அவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்ததும், கீழமை நீதிமன்றம் ரிமாண்ட் செய்ததும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது நீதிமன்றம் அவரை பினையில் விடுதலை செய்துள்ளது. ஆனால் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றி, முடக்க முயல்வதும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அவர் கனடாவில் கல்வியைத் தொடரத் தடையாக அமையும்; பெரும் அநீதிக்கு வழிவகுக்கும் என்பதால், தமிழக அரசு உடனடியாக மாணவி சோபியா மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் நான் வழக்கைத் திரும்பப் பெறமாட்டேன் என்று கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மிகுந்த அக்கறையோடு படித்து, மேல் நாட்டில் ஆராய்ச்சிக் கல்வி பயில்கிற ஒரு மாணவியின் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதை மனிதாபிமானத்தோடு எண்ணிப் பார்த்து, தானாகவே முன்வந்து புகாரைத் திரும்பப் பெறுகிறேன். அரசு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அறிவிப்பதுதான் பெருந்தன்மையும், மனிதநேயமும் கொண்ட அணுகுமுறையாக அமையும்." என அறிவுறுத்தியுள்ளார்.