அமேசான் நிறுவனத்தின் மதிப்பு 1 டிரில்லியன் டாலரை எட்டியது
பங்கு சந்தை மதிப்பில் செப்டம்பர் 4-ஆம் தேதி அமேசான் நிறுவனம் 1 டிரில்லியன் டாலரை எட்டியது.
இந்த மதிப்பை பெறும் இரண்டாவது அமெரிக்க நிறுவனம் அமேசானாகும். ஆகஸ்ட் 2ம் தேதி, ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு 1 டிரில்லியன் டாலரை தொட்டது.
அமேசான் நிறுவனத்தின் இந்த இமாலய பெருக்கம், அதன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஸோஸை, போர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண புத்தக விற்பனை விற்பனை நிறுவனமான ஆரம்பிக்கப்பட்ட அமேசான், உலகத்தின் சில்லறை விற்பனை சந்தையின் போக்கை சரியாக கணித்ததோடு, நவீன தகவல் தொழில்நுட்பங்களை ஏற்ற விதத்தில் பயன்படுத்தி வேகமாக வளர்ந்துள்ளது.
2009 அக்டோபர் 23ம் தேதி அமேசானின் பங்கு 100 டாலர் மதிப்பில் இருந்தது. 2017 அக்டோபர் 27 நிலவரத்தின்படி அப்பங்கு 1,000 டாலராக உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதன்முதலாக அமேசானின் பங்கு 2,000 டாலர் மதிப்பை பெற்றது. அதன் வர்த்தகம் 1.4 சதவீதம் உயர்ந்து தற்போது பங்கு 2,050.2677 டாலர் மதிப்பாக உள்ளது. இந்த உயர்வு அமேசான் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலரை கடக்க உதவியுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டில் நகரைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் துரித சேவை, கட்டணமில்லாத பொருட்கள் டெலிவரி போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் மனதிலும் உயர்ந்துள்ளது.