சென்னையில் பறக்கும் ரயிலை கவிழ்க்க சதியா...?
வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமென்ட் சிலாப் வைக்கப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. சிறிது நேரத்தில், ரயிலின் அடிப்பகுதியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. உடனே,ஓட்டுநர் ரயிலை பாதி வழியில் நிறுத்தி, இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் சிதறி கிடந்தன.
இது தொடர்பாக ஸ்டேசன் மாஸ்டர், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு, நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே, 2-வது முறையாக ரயில் தண்டவாளத்தில் நேற்றிரவு சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, வேளச்சேரி, தரமணி, பெருங்குடி ஆகிய இடங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் ரயிலை கவிழ்க்க தீட்டப்பட்ட சதியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.