ஸ்டாலினுக்கு அழகிரி சவால்...!

சென்னையில் நடந்த அமைதிப்பேரணியில் பங்கேற்றவர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அழகிரி சவால் விடுத்துள்ளார்.

தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.

கட்சி மேலிடம் கண்டு கொள்ளாத வகையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், அழகிரி சென்னையில் இன்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. பேரணியில் மு.க அழகிரி, துரை தயாநிதி, கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து பேரணியில் கலந்துகொண்டனர். கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு அழகிரியின் அமைதிப்பேரணி நிறைவு பெற்றது.

பின்னர் பேசிய அவர், பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி கூறினார். பேரணியில் பங்கேற்ற அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா என அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அழகிரியில் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதை பார்த்த அரசியல் விமர்சகர்கள் , தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட வாக்குகளை தி.மு.கவுக்கு எதிராக அழகிரி மாற்றுவார் என கருத்து கூறுகின்றனர்.

More News >>