வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆத்திரம்: மாணவனின் கையை முறித்த தலைமை ஆசிரியர்
மதுராந்தகம் அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத 5ம் வகுப்பு படிக்கும் மாணவனின் கையை தலைமை ஆசிரியர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம். அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். ஜீவரத்தினம் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினான். அப்போது, அவன் வீட்டில் அழுதப்படி தனது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான்.
இந்நிலையில், வீட்டிற்கு வந்த பெற்றோர் அழுதுக்கொண்டிருந்த ஜீவரத்தினத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஜீவரத்தினத்திடம் விசாரணை நடத்தியதில், வீட்டுப்பாடம் முடிக்காததால் தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்து தாக்கியதாக தெரிவித்தான்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஜீவரத்தினத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஜீவரத்தினத்தின் கை முறிந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஜீவரத்தினத்தின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது போலீசில் புகார் தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் மீது புகார் பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.