அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
குட்கா ஊழலில் சிபிஐ சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகளை சட்ட விரோதமாக விற்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்கியது தொடர்பான வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
குட்கா ஊழலை மூடி மறைக்க சதி நடந்த நிலையில், அந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண நடத்தப்படும் இச்சோதனைகள் சரியான நடவடிக்கையாகும்.
தமிழக கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் இல்லாத நிலையில், அவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள சி.பி.ஐ. மறுத்து விட்டது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் புதிய வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
யார், யாருக்கெல்லாம் குட்கா ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு, முதற்கட்ட ஆதாரம் உள்ளவர்களின் வீடுகளில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று சி.பி.ஐ. சோதனைக்கு உள்ளானவர்கள் அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்பது உறுதியாகிவிட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களை இன்னும் பதவியிலும், பணியிலும் நீடிக்க அனுமதிப்பதை ஏற்க முடியாது. எனவே, இனியும் தயங்காமல் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தமிழக அரசு பதவி நீக்கம், பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.