மீன்பிடித் தொழிலை பாதுகாக்க இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவின் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது கப்பல் மோதியதால் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இது மிகவும் வேதனைக்குரியது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக அரசு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக மத்திய மாநில அரசுகள் கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை செய்து கொடுத்து, கடலோரப் பாதுகாப்பு படைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களின் மீன் பிடித்தொழில் நீண்ட காலமாக பிரச்சனைக்குரியதாக நீடிக்கிறது. அதாவது மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள், மீன்பிடிச் சாதனங்கள் சேதப்படுத்தப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், நாட்டுடமையாக்கப்படுவதும் இன்னும் நீடித்துக்கொண்டு தான் இருக்கின்றது.
மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 168 விசைப்படகுகள் சேதமடைந்த நிலையில் இன்னும் இலங்கை வசம் தான் உள்ளது. இச்சூழலில் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய அரசாக மத்திய மாநில அரசுகள் செயல்படவில்லை என்பது தான் உண்மை நிலை. இது கண்டிக்கத்தக்கது.இந்நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் 2 படகுகளில் நேற்று முன்தினம் இரவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் படகுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும், மீன்பிடிச் சாதனங்களையும் சேதப்படுத்தி, அச்சுறுத்தினர்.
இதனால் பயந்த நிலையில் தமிழக மீனவர்கள் அங்கிருந்து தப்பி கரை திரும்பினர். இந்த தாக்குதலில் தமிழக மீனவர்களுக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டுத் தொகையை பெறவும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசும், தமிழக அரசும் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக உடனடியாக அமைச்சர்கள், அதிகாரிகள், மீனவப்பிரதிநிதிகள் கொண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும். அது தொடர்பாக மத்திய அரசு இலங்கையிடம் பேசி தமிழக மீனவர்களின் மீன் பிடித்தொழிலுக்கு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் பாதிப்புகள் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தை பெறவும் வற்புறுத்த வேண்டும். இனிமேல் தமிழக மீனவர்கள் உள்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளிலோ, வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டின் கடற்பகுதிகளிலோ மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.