ஃபேஸ்புக் கணக்கை மூடும் அமெரிக்கர்கள்!
அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயனர்கள், நான்கு பேரில் ஒருவர் கணக்கை மூடிவிட்டதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுதல், அமெரிக்க தேர்தலில் அந்நிய நாடுகளின் தலையீடு, வெறுப்பு பரப்புரை போன்ற பல்வேறு காரணங்களால், ஃபேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் அமெரிக்கர்களில் முக்கால் பங்கு பேர் அதை கடந்த ஆண்டு பயன்படுத்திய அளவுக்கு உபயோகிக்கவில்லை.
2016 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலின்போது அந்நிய சக்திகள் ஃபேஸ்புக் மூலம் தாக்கத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இதுபோன்ற தாக்கத்தை தடுப்பதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க், புதன்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர் குழுவிடம் முன்னிலையானார். ப்யூ (Pew) என்ற ஆய்வு நிறுவனம் ஃபேஸ்புக் பயனர்கள் பற்றி செய்த கணிப்பின் முடிவும் அன்றே வெளியாகியுள்ளது.
ப்யூ நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின் முடிவின்படி, பெரியவர்களில் 74 சதவீதத்தினர் ஃபேஸ்புக் கணக்கில் தங்கள் தனிப்பட்ட தகவலுக்கான அமைப்பை மாற்றியுள்ளனர் அல்லது பயன்பாட்டை தொடரவில்லை அல்லது ஃபேஸ்புக் செயலியையே அழித்துவிட்டனர் என தெரிகிறது. மொத்தத்தில் இதுவரை பயன்படுத்தி வந்த அமெரிக்கர்களுன் கால்வாசி பேர் தங்கள் போனில் இருந்து ஃபேஸ்புக் செயலியை அழித்துவிட்டனர்.
பெரியவர்களுன் 54 சதவீதத்தினர் தங்கள் தனிப்பட்ட தகவல்களின் அமைப்பை மாற்றியுள்ளனர். 42 சதவீதத்தினர் பல மாதங்கள் அல்லது அதற்கு மேலாக செயலியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். 18 முதல் 29 வயது பிரிவினரில் 64 சதவீதத்தினர் கடந்த ஆண்டு தனிப்பட்ட தகவல் அமைப்பை மாற்றியுள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்டோரில் 33 சதவீததினரே இம்மாற்றத்தை செய்துள்ளனர்.
"கடந்த மாதங்களில் தனிப்பட்ட தகவல் பற்றிய எங்கள் நிறுவனத்தின் கொள்கையை தெளிவுபடுத்தி, எளிமைப்படுத்தியுள்ளோம். தகவல்களை பயன்படுத்தவும், தரவிறக்கம் செய்யவும் அழிக்கவும் எளிதான முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். தங்கள் தகவல்களை ஃபேஸ்புக் கணக்கில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விளக்க கூட்டங்களை உலகெங்கும் அவ்வப்போது நடத்தி வருகிறோம்," என்று ஃபேஸ்புக் நிறுவனம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளது.