7 பேர் விடுதலை... தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த மத்திய அரசு, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுடனே விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், பேரறிவாளன் உள்பட 7 பேரை கருணை அடிப்படையில் விடுவிக்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே, இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என வும் 2015 டிசம்பர் 30ஆம் தேதி ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு மீது அவரே முடிவு எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.