தேனி மாவட்ட ஆட்சியருக்கு திருமாவளவன் கண்டனம்
தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்" தேனி மாவட்ட ஆட்சியர், தான் நடத்துகிற ஆய்வுக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் ரேசன் பொருட்களைத் தாமே முன்வந்து வேண்டாம் என சொல்லுமாறு மக்களை ஊக்குவிக்க வேண்டுமென்று அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியரின் வற்புறுத்தலால் பலர் அப்படி ரேசன் பொருட்கள் வேண்டாம் என எழுதிக் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அப்பட்டமான சட்டவிரோதச் செயலாகும். இதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
எரிவாயு மானியத்தைத் தாமே முன்வந்து விட்டுகொடுக்குமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது. அதைப் பின்பற்றி தேனி மாவட்ட ஆட்சியரும் ரேசன் பொருட்கள் வேண்டாமென சொல்லுமாறு நிர்பந்தப்படுத்தி வருகிறார்.
தமிழக அரசோ முதலமைச்சரோ இப்படி எந்த அறிவிப்பையும் செய்யாத நிலையில் தனது விருப்பத்திற்கு இப்படி மாவட்ட ஆட்சியர் செயல்படுவது ஏன் என்பது தெரியவில்லை. இந்தியாவிலிருக்கும் மாநிலங்களில் நூறு விழுக்காடு பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலம் தமிழகம் தான் என ஆட்சியாளர்கள் பெருமைபட்டுக் கொள்ளும் நிலையில் இதற்கு மாறாக தேனி மாவட்ட ஆட்சியர் செயல்பட்டு வருவது வியப்பளிக்கிறது.
தேனி மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை உடனடியாக தடுக்கப்படாவிட்டால் அதற்குத் தமிழக அரசின் ஒப்புதல் இருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு மற்ற மாவட்ட ஆட்சியர்களும் அதைப் பின்பற்றக்கூடும். அதனால், தமிழக அரசின் பொதுவிநியோக திட்டம் செய்லபடுவதில் மிகபெரிய இடையூறு ஏற்படும்.
ரேசன் பொருட்கள் உட்பட அனைத்து விதமான பொது சேவைகளும் மக்களுக்குத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே மாவட்ட ஆட்சியரின் கடமையாகும். அதைச்செய்யாமல் பொது சேவைகளுக்கு தடை ஏற்படுத்தும் தேனி மாவட்ட ஆட்சியரின் போக்கை உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.