குட்கா விவகாரம்... 4 பேரை கைது செய்தது சிபிஐ

குட்கா முறைகேடு விவகாரத்தில், 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் உணவு பாதுகாப்பு துறை வணிகவரித்துறை காவல்துறை அதிகாரிகளின் இல்லங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணிநேர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதிகாரிகளுக்கு பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இடைத்தரகர்கள் 3 பேர் மூலம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மாதவராவ் ஒத்துக் கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் இன்று இரண்டு இடைத்தரகர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இடைதரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா நிறுவனத்திடம் பணம் பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கலால் வரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகரிகள் சிலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களிடம் நடைபெற்று வரும் விசாரணையின் முடிவில் இவர்கள் எந்தெந்த அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தனர் என்பது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டு அடுத்த கட்டமாக அந்த அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குட்கா ஊழல் விவகாரம் நடைபெற்ற 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை செங்குன்றம் ஆய்வாளராக பணியாற்றிய சம்பத் என்பவரது இல்லத்திற்கு சிபிஐ போலீசார் சீல் வைத்துள்ளனர். இவர் தற்போது தூத்துக்குடி சிப்காட் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>