இந்தியாவின் தலைமை நீதிபதியாகிறார் கோகாய்

தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்டோபர் மாதம் 2ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.

மரபுபடி, பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதி தன்னுடைய இடத்துக்கு ஒரு நீதிபதியை பரிந்துரை செய்ய வேண்டும். அதன்படி, மிஸ்ரா, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமிக்கும்படி கடிதம் எழுதியுள்ளார்.

தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின்படி, குடியரசுத் தலைவர் ரஞ்சன் கோகாயை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவிப்பார். அக்டோபர் மாதம் 3ம் தேதி, இந்தியாவின் 46வது தலைமை நீதிபதியாக கோகாய் பதவியேற்பார்.

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கோகாய் 1954ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிறந்தவர். இந்திய பார் கவுன்சிலில் 1978ம் ஆண்டு சேர்ந்த அவர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினார். 2001ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, கௌஹாத்தி உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2011 பிப்ரவரி 12ம் தேதி உயர்த்தப்பட்டார். 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

ரஞ்சன் கோகாயின் தந்தை கேசாப் சந்திர கோகாய் 1982ம் ஆண்டு அஸ்ஸாம் காங்கிரஸ் அரசின் முதலமைச்சராக இரு மாதங்கள் பணியாற்றியுள்ளார்.

விசாரணைக்கு வந்த வழக்கினை திரும்ப பெற்ற விவகாரத்தில் மனுதாரருக்கு ஐந்து லட்சம் அபராதம் விதித்தது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி, நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகுர் உடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தது, பிரதமர், குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர ஏனைய அரசியல் தலைவர்களின் படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது உள்பட பல விஷயங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர் ரஞ்சன் கோகாய்.

அக்டோபர் 3ம் தேதி முதல் ரஞ்சன் கோகாய், ஓராண்டு மற்றும் 44 நாட்கள் பதவியில் இருப்பார். 2019 நவம்பர் 17ம் தேதி பணி ஓய்வு பெறுவார்.

More News >>