மாநாட்டில் கலந்துக் கொள்ள ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள 32வது இந்தியன் இன்ஜினியரிங் மாநாட்டு நிறைவு விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வர உள்ளார்.
சென்னை, கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இன்று மாலை 5.30 மணியளவில் 32வது இந்தியன் இன்ஜினியரிங் மாநாட்டு நிறைவு விழா நடைபெற இருக்கிறது. இதில், ஜனாதிபதி கலந்துக் கொள்கிறார்.
முன்னதாக, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் ஜனாதிதி, முதலில் டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதையடுத்து, 1.25 மணியளவில் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
பின்னர், மதுரைக்கு மீண்டும் காரில் செல்லும் ஜனாதிபதி பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இங்கு, மாநாட்டில் கலந்துக் கொள்கிறார்.இதன்பிறகு, இன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். நாளை காலை, முக்கிய அதிகாரிகளை சந்தித்து பின்னர், விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார் ஜனாதிபதி.