குட்கா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. குட்கா நிறுவனத்திடம் பணம் பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக மாதவராவ் பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாப்சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவருக்கும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த ஐந்து பேரையும் காவலில் எடுப்பதற்கான மனுவை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் டி.எஸ்.பி மன்னர் மன்னர், ஆய்வாளர் சம்பத் ஆகியோர்க்கு சம்மன் அனுப்பவும் சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. முறைகேடு பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்படும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.