மனைவியிடம் தகராறு... தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுரேந்திர குமார் தாஸ் (வயது 30). 2014ம் ஆண்டு இந்திய காவல் பணி நியமனம் பெற்ற இவர், தற்போது கான்பூர் நகரத்தின் கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை விஷம் உண்டு தற்கொலைக்கு முயன்ற அவருக்கு தற்போது எக்மோ கருவி (ECMO - Extra Corporeal Membrane Oxygenation)மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுரேந்திர குமாருக்கு சிகிச்சை அளிப்பதற்காக எக்மோ கருவி மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கான்பூர் மருத்துவர்களுக்கு உதவுவதற்கு மும்பையிலிருந்தும் மருத்துவர்கள் வந்துள்ளனர்.

எலிக்கு வைக்க வேண்டும் என்று கூறி, வீட்டுப் பணியாளர் மூலம் நஞ்சு வாங்கிய சுரேந்திர குமார், அதை தாம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மயங்கி கிடந்த இடத்திலிருந்து கையால் எழுதப்பட்ட கடிதத்தை கண்டெடுத்த போலீஸார், கையெழுத்தை பரிசோதிக்க நிபுணர்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

மனைவியுடனான தகராறின் காரணமாக சுரேந்திர குமார் தாஸ் மன உளைச்சலில் இருந்ததும், தாயிடமும் அவர் கடந்த 40 நாட்களாக பேசாமல் இருந்ததும், தற்கொலை செய்வதற்கான வழிகளை அவர் அவர் கூகுளில் தேடியுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

36 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கான்பூர் கூடுதல் டிஜிபி அவினாஷ் சந்திரா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

More News >>