நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் சீட் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் 309 மதிப்பெண் பெற்றும் டாக்டர் படிப்புக்கு சீட் கிடைக்காததால் விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம், சேலையூர், மகாலட்சுமி நகர், புறநானூறு தெருவை சேர்ந்தவர் எட்வர்டு. தாம்பரம் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ள இவருக்கு சுஜாதா என்ற மனைவி தனியார் பல்கலையில் பேராசிரியராக உள்ளார். இவர்களுக்கு, ஏஞ்சலின் ஸ்ருதி (19) என்ற மகள் இருந்தார். செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் 309 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இருப்பினும், ஏஞ்சலின் ஸ்ருதிக்கு டாக்டர் படிப்பு படிக்கு சீட் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க ரூ.12 லட்சம் கேட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்து வந்த ஏஞ்சலின் ஸ்ருதி நேற்று முன்தினம் அவரது படுக்கை அறையில் கவரால் முகத்தை மூடி செல்போன் சார்ஜரில் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் காவல் நிலைய போலீசார், மாணவியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவி நீட் தேர்வில் 309 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும் டாக்டராக சீட் கிடைக்காத வேதனையில் இருந்ததாகவும் இதனால் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

More News >>