சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள காக்கிவாடன்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80 மேற்பட்ட அறைகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலக்கும் அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பொன்னுசாமி, பாண்டியராஜன் ஆகிய இருவருக்கும் 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக அதிக அளவில் பட்டாசுகள் தயாரித்து வைத்திருப்பதால், சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.