இலங்கையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 % நிறைவு- மைத்ரிபால சிறிசேன
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்ரி பால சிறிசேன, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக கூறினார்.
"எஞ்சிய 12 சதவீத பணிகள் துரிதமாக நிறைவு செய்யப்படும். வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும், போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்தவும் இலங்கை அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது" என தெரிவித்தார்.
"காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விரைவில் அமைச்சரவை துணை குழு அமைக்கப்படும்.
காணாமல் போனவர்கள் குடும்பத்தின் நலனை காக்க, அரசு சில நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது" என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறினார்.