கணவருக்கு வீண் அலைச்சல்: டாஸ்மாக் கடையை திறக்கும்படி வலியுறுத்தும் பெண்கள்
விழுப்புரம் அருகே, கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இதனால், குடிமகன்கள் 5 கி.மீ கடந்து சென்று மது குடிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், தங்களது கணவன்மார்கள் மது குடிப்பதற்காக நீண்ட தூரம் கடந்த சென்று வருவதால் அலைச்சலும் கடும் சிரமமும் ஏற்படுவதாக அப்பகுதி பெண்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதனால், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தை கலைக்க முயன்றனர்.
இதற்கிடையே, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு போராடிய பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.