ரயிலை வழியில் நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்ற ஓட்டுநர்
By SAM ASIR
பணி நேரம் முடிந்து விட்டதால், ஓட்டி வந்த ரயிலை பாதி வழியில் விட்டு விட்டு ஓட்டுநர் இறங்கி சென்றார். இதனால் 11 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
சனிக்கிழமை காலை கும்பகோணத்திலிருந்து பொள்ளாச்சிக்கு நெல் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. 41 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் அதிகாலை 3 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். கிட்டங்கியில் சரக்கு ஏற்ற தாமதம் ஆனதால் ஐந்து மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே மாதுளம்பட்டி ரயில்வே கேட் அருகே வந்தபோது, ரயிலை நிறுத்திய ஓட்டுநர், தனது பணி நேரம் முடிந்து விட்டதால் மாற்று ஓட்டுநரை அனுப்புமாறு அதிகாரியை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சாவூரில் மாற்று ஓட்டுநர் இருப்பதால் அது வரைக்கும் ரயிலை ஓட்டிச் செல்லுமாறு அதிகாரி தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், ஓட்டுநர் ரயிலை ரயில்வே கேட்டை மறித்து நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
இதனால் சாக்கோட்டை மற்றும் நாச்சியார்கோவில் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு கும்பகோணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கும்பகோண ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடைக்கு மற்ற ரயில்கள் வருவதும் தடைபட்டது. கும்பகோணம் ரயில் நிலைய மேலாளர், திருச்சி கோட்ட மேலாளருக்கு தகவல் அனுப்பியதையடுத்து, மாற்று ஓட்டுநர் அனுப்பி வைக்கப்பட்டது சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சரக்கு ரயில் புறப்பட்டது.