உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: போலீஸ் விசாரணை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகர போலீஸ் சுப்பிரண்ட் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கான்பூர் நகர போலீஸ் சூப்பிரண்ட்டாக பணியாற்ற வந்தவர் சுரேந்திர குமார் தாஸ் (30). ஐபிஎஸ் அதிகாரியான இவர் திடீரென விஷம் குடித்து மயக்க நிலையில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து, டிஜிபி ஓ.பி.சிங் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று சுரேந்திர குமார் தாஸ¨க்கு அளித்து வரும் சிகிச்சை முறை குறித்து கேட்டு அறிந்தார். அப்போது, விஷம் உடல் முழுவதும் பரவியுள்ளதால் சுரேந்திர குமாரின் உடல் உறுப்புகள் சரியாக செயல்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுரேந்திர குமார் தாஸ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரேந்திர குமார் தாஸின் மறைவுக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.