ஹெச்டிஎஃப்சி வங்கி துணை தலைவர் கொலை

மும்பையில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதத்தினால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு மும்பையில் மலபார் ஹில் பகுதியில் வசித்து வந்தவர் சித்தார்த் சங்வி (வயது 39). சித்தார்த் சங்விக்கு மனைவியும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் ஹெச்டிஎஃப்சி வங்கியில் துணை தலைவராக பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை இரவு வரை இவர் வீடு திரும்பவில்லை.   ஆகவே, மும்பை என்.எம். ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் சித்தார்த் சங்வி காணாமல் போனது குறித்து புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், சனிக்கிழமை சித்தார்த்தின் கார் நவி மும்பை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. காரின் பின் இருக்கையில் இரத்தக் கறைகளும் கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.   சங்வியின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இரண்டு இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சித்தார்த் சங்வி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக இருபது வயதான ஒரு நபரை கைது செய்திருப்பதாகவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.   இந்த குற்ற சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சங்வியின் பதவி உயர்வு காரணமான பொறாமை மற்றும் தனிப்பட்ட விரோதம் காரணமாக, கூலி படை மூலம் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
More News >>