ஆக்சிஸ் வங்கிக்கு புதிய சிஇஓவாக அமிதாப் சௌத்ரி நியமனம்
By SAM ASIR
ஆக்சிஸ் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவ்வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் தற்போதைய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷிக்கா சர்மா, கடந்த ஜூன் மாதம் நான்காவது முறையாக பொறுப்பேற்று கொண்டார். பதவி காலம் முடிவதற்கு 29 மாதங்கள் இருக்கின்ற நிலையில் தம்மை பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஷிக்கா சர்மா பதவியில் தொடருவார்.
புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்ரியை நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிகிறது.
தற்போது ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சௌத்ரி பணியாற்றி வருகிறார். 54 வயதாகும் சௌத்ரி, ஹெச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 2010 ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை வரும் 2019 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரை மூன்றாண்டு காலத்துக்கு அமிதாப் சௌத்ரி வகிப்பார் என தெரிகிறது.