ஏமன் நாட்டில் காலரா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு

சனா: ஏமன் நாட்டில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்தி வரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. இதனால், ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடணப்படுத்தியது.

இது சனாவை கடந்து அருகாமையில் உள்ள அமானத் அல் செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவியது. ளுலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் முகாம்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளும் ஏராளமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஏமனில் சுமார் பத்து லட்சம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 76 லட்சம் மக்கள் காலரா அபாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஏமன் நாட்டில் 1.7 கோடி பேர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

More News >>