எடை குறைப்பு - மாயமா, மந்திரமா?

"வெயிட் குறைக்கணும்னு பார்க்கிறேன்," என்று மட்டும் நண்பர்களிடம் சொல்லி பாருங்கள்! "காலையில் சூடான நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும், அரை டீஸ்பூன்  தேனும் கலந்து குடித்தால் எடை குறையும்," என்று ஆரம்பித்து எத்தனையோ ஆலோசனைகள் காதில் விழுந்து கொண்டே இருக்கும்.   வாக்கிங், ஜாகிங் என்று ஆலோசனை கூறுபவர்களாகட்டும், கை மருத்துவம் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் பொருட்களை சாப்பிட சொல்லுபவர்களாட்டும், அதிக ஆபத்தில்லாதவர்கள்.    "ஒரு மாதத்தில் பத்து கிலோ குறையலாம்," "இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் சிக்கென்று சிம்ரன் மாதிரி மெலிந்து விடுவீர்கள்" என்பவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள். இதுபோன்ற உறுதிமொழிகள், அறிவியல் பூர்வமானவையல்ல. தகுதி வாய்ந்த உணவியல் நிபுணர்களால், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள், துணை உணவுகள் பணத்தை தண்ணீராய் கரைப்பதோடு, உடல்நலத்திற்கும் கேடு விளைவித்து விடும்.   உடல் எடை குறைப்பது குறித்த பொய்யான நம்பிக்கைகள்: ஒரே மாதத்தில் பத்து கிலோ குறைக்கலாம்:  இதுபோன்ற விளம்பரங்களை அதிகமாக பார்க்க முடிகிறது. பொய்யான வாக்குறுதி இது; ஒரே மாதத்தில் அவ்வளவு எடை குறைந்தால், அது ஆரோக்கியமுமல்ல. உடல் நலத்தைப் பொறுத்த மட்டில் நீண்ட நாள் பலன் கொடுக்க முறையை மட்டுமே கைக்கொள்ளவேண்டும். மாதத்தில் 2 முதல் 5 கிலோ வரை எடை குறைவது அறிவியல்பூர்வமாக ஆரோக்கியமான முறையாகும்.   உணவு கட்டுப்பாடு வேண்டாம்; உடற்பயிற்சியே போதும்:  உடற்பயிற்சி, பல்வேறு விதங்களில் பலனளிக்கக்கூடியதுதான். ஆனால், எடை குறைப்பை பொறுத்த மட்டில் உடற்பயிற்சி அளவுக்கு உணவு கட்டுப்பாட்டுக்கும் முக்கியத்துவம் உண்டு. எடுத்துக்காட்டாக, 1 சிக்கன் சாண்ட்விச் சாப்பிட்டால், 400 முதல் 500 கலோரி ஆற்றல் உடலில் சேர்ந்து விடும். அந்த ஆற்றலை எரிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படியென்றால், வாயைக் கட்டாமல் சாப்பிட்டால் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டியதிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எடை குறைவதற்கு கட்டுப்பாடான உணவு பழக்கம் கண்டிப்பாக தேவை.   பட்டினி கிடக்க வேண்டும்:  சாப்பிடாமல் இருந்தால், உடலின் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டோபாலிஸம் மெதுவாக நடைபெறும். பகலில் சாப்பிடாமல் இருந்து விட்டு, மாலை நேரத்தில் பசியை பொறுக்க இயலாமல் ஆரோக்கியமற்ற உணவுகளை வயிற்றுக்குள் அள்ளிப் போட்டுக்கொள்பவர்கள் எத்தனையோ பேர்! ஆகவே, உடலினுள் நடக்கும் செயல்பாடு பாதிக்கப்படாமல் எடையை குறைக்க வேண்டும்.   கார்போஹைடிரேட் உணவுக்கு நோ:  கார்போஹைடிரேட் என்னும் உணவிலுள்ள மாவுப்பொருளால் உடல் எடை அதிகரிக்காது. சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றில் உள்ள கார்போஹைடிரேட் எடையை கூட்டலாம். முழு தானியங்களில் உள்ள கார்போஹைடிரேட் ஆபத்தானதல்ல.   எடை குறைப்புக்கான உணவு:  எல்லாவற்றுக்கும் ஒரு விசேஷ உணவு முறையை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். எடை குறைப்புக்கான விசேஷ உணவு (Fad diet) முறை மொத்தமே 800 முதல் 1000 கலோரிகளை மட்டுமே தரும். அந்த உணவு முறையை கடைப்பிடிப்பதும் கடினம். நாளடைவில் இவ்வித பிரத்யேக உணவுகள் எதிர்மறை விளைவுகளையே தரும். ஆகவே, எடை குறைப்புக்கான விசேஷ உணவு முறை என்று யாராவது கூறினால், சற்று கவனமாக இருங்கள்.   பழம் சாப்பிட்டால் எடை குறையும்:  பழங்கள் மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை சர்ரென்று இறங்கி விடும் என்று சிலர் கூறுவர். பழங்களிலும் கலோரி என்னும் ஆற்றல் உள்ளது. தொடர்ந்து பழங்கள் மட்டுமே உண்டு வந்தால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்குக் கிடைக்காது. நாள் செல்ல செல்ல இது உடல் உபாதைகளை கொண்டு வரும்.   என்னதான் செய்ய வேண்டும்? ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் என்றெல்லாம் அவசர ஆசைப்படாதீர்கள். சமச்சீர் உணவு உண்ணுங்கள். ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள். வாரத்திற்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்து விட்டு, இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி, நம் உடலில் அதிகப்படியாக தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆற்றலை உடற்பயிற்சி எரிக்கிறது. உடற்பயிற்சியால் பாதிப்படைந்த தசைகள் குணமாகவும் இரண்டு நாள் ஓய்வு அவசியம். எடை குறைவதற்கான உடற்பயிற்சிகள் சற்று கடினமாவை. இதய துடிப்பை அதிகமாக்கக்கூடியவை. வெறுமனே நடைப்பயிற்சி செய்தல் மட்டும் உடல் எடையை குறைக்க உதவாது. நடை, ஓட்டம் என்று நாள் செல்ல செல்ல பயிற்சியின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.   ஆரோக்கியமான உணவும், வாரத்திற்கு ஐந்து நாள் உடற்பயிற்சியும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
More News >>