பெட்ரோல், டீசல் விலை... சந்திரபாபு நாயுடு அதிரடி
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில், ஆந்திராவில் அதன் மீதான விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. மத்திய அரசோ, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படுவதாகவும், இந்த விலைக் குறைப்பு நாளை அதிகாலை முதல் அமலுக்கு வரும் எனவும் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு வசூலிக்கும் வரியை மக்களின் நலன் கருதி குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.