ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு... கைதான 2 பேருக்கு தூக்கு
ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடந்த 2007ஆம் ஆண்டு உணவகம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் பலியாகினர். 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை போலீசார் கடந்த 2008-ல் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை காவல்துறையினர் இன்னும் தேடி வருகின்றனர்.
இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை அனீக் சயீத், இஸ்மாயில் சவுத்ரி ஆகியோரை குற்றவாளிகள் என ஹைதராபாத் பெருநகர இரண்டாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்த தாரிக் அஞ்சும் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.