குட்கா ஊழல்... 5 பேருக்கு சிபிஐ காவல்

குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்பட 5 பேரை விசாரிக்க சிபிஐக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த குற்றச்சாட்டு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் அருகிலுள்ள குடோனில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், 250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சிக்கிய டைரி ஒன்றில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கலால் ஆகிய துறை அதிகாரிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக வழக்கு தொடர்ந்து. இதனையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 3 மாதங்களாக ஆவணங்களை திரட்டி வந்த சிபிஐ தற்போது அதிரடியாக களமிறங்கியது. கடந்த 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உள்பட 35 இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

சோதனை இறுதியில், குட்கா நிறுவனத்திடம் பணம் பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக மாதவராவ் பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாப்சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரணை செய்த சென்னை சிபிஐ நீதிமன்றம், 5 பேருக்கும் நான்கு நாட்கள் காவல் வழங்கியுள்ளது. 5 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>