நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் யாருடன் கூட்டணி?
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் தனது அரசியல் கூட்டணி ஏற்படும் என்பது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தனி அருகே சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.
விழா முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சமக தலைவர் சரத்குமார், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் சம்மதம் தெரிவித்தால் அக்கட்சியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய கருத்திற்கு பிற மாநிலங்களிலும் ஊழல் ஆட்சி தான் நடைபெறுகிறது என பதிலளித்துள்ளார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைமையிலான மக்கள் நலக்கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்தது மட்டுமல்லாமல் அதன் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்தே டெபாசிட் இழக்கும் சூழல் ஏற்பட்டது.
அதன்பின் தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் சரத்குமாரின் கருத்திற்கு விஜயகாந்த் என்ன பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.