பெண் பத்திரிகையாளரை மிரட்டிய அமைச்சரின் ஆட்கள்

தமிழக அமைச்சரின் ரகசியங்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளரை அவரது நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர் கோமல் கெளதம். இவர் கடந்த 7-ஆம் தேதியன்று தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

குறிப்பாக கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அக்கட்டுரையில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் என்பவர், பத்திரிகையாளரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்ந்து மிரட்டல் தொணியில் குறுஞ்செய்தி அனுப்பி வந்ததாக கூறப்படுகின்றது.

மேலும், குறித்த கட்டுரை வெளியான பத்திரிகையின் துணை-ஆசிரியர் மயில்வாகனன் உள்ளிட்டோருக்கும் சந்திரபிரகாஷ் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தேசிய மாதர் சங்கமும் பத்திரிக்கையாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளது.

இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “உள்ளாட்சி துறையை கொள்ளையாட்சி துறையாக மாற்றியுள்ள அமைச்சர் வேலுமணியின் அராஜகங்களை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை மிரட்டிய அமைச்சரின் காண்ட்ராக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

More News >>