ஓ.டிக்கு சம்பளம் இல்லை... இன்போசிஸ் மீது அமெரிக்காவில் வழக்கு
பணி நேரத்தை விட அதிக மணி நேரங்கள் வேலை வாங்கி விட்டு, அதற்கான ஊதியத்தை தர மறுப்பதாக இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் புலனாய்வு துறை இது குறித்து விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
அமெரிக்காவில் ரோட் ஐலண்ட் இன்போசிஸில் அனுஜ் கபூர் என்பவர் வேலை பார்த்துள்ளார். 2015ம் ஆண்டு மே முதல் 2017 ஜூன் வரையிலான கால கட்டத்தில், வாரத்திற்கு 40 மணி நேரம் என்ற இலக்கை தாண்டி அதிக நேரம், சில நாள்களில் நாளொன்றுக்கு 11 மணி நேரம் தம்மை வேலை வாங்கியதாகவும், குறிக்கப்பட்ட நேரத்தை விட 1,084 மணி நேரம் அதிகமாக (Overtime) பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அனுஜ் கபூர், இன்போசிஸ் அந்த அதிகப்படியான வேலை நேரத்திற்கு உரிய ஊதியத்தை தர மறுக்கிறது என்று புகார் செய்துள்ளார்.
"40 மணி நேரத்திற்கு அதிகமாக பணிபுரியும் காலத்திற்கு ஊதியம் கிடையாது. அப்படி பணியாற்ற மறுப்பவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம்," என்று தனது மேலாளர் கூறியதாகவும் அனுஜ் கபூர் கூறியுள்ளார்.
தனது முன்னாள் ஊழியரால் ஜூன் மாதம் தொடரப்பட்ட வழக்குக்கு இன்போசிஸ் ஆகஸ்ட் மாதம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹெச்-1பி விசா பெற்ற அனுஜ்ஜின் பெயர், ஊதியம் வழங்கப்படும் பணியாளர்கள் பட்டியலில் காட்டப்பட்டிருந்தாலும் அவர் மணி நேர கூலிக்காகவே பணியமர்த்தப்பட்டிருந்தாகவும், தொழில் போட்டி காரணமாக, ஊதியத்திற்கான நேரத்தை தாண்டி பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு, பணி நேரம் தாண்டிய வேலைக்காக (Overtime) கலிபோர்னியாவின் தொழிலாளர் நல சட்டத்திற்கேற்ப இன்போசிஸ் 26 மில்லியன் டாலர் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெச்-1பி விசாவில் விதிவிலக்கான ஊதிய பிரிவில் (exempt salaried) தொழிலாளர்களை பட்டியலிட்டு காட்டிவிட்டு, அவர்களை மணிக்கணக்கு பணிக்காக பயன்படுத்தும் (non-exempt hourly workers) நடக்கை குறித்து ரோட் ஐலண்ட்டின் ஊதியம் மற்றும் வேலைநேரத்திற்கான துறை விசாரணை நடத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இன்போசிஸ் நிறுவன செய்தி தொடர்பாளர், முன்னாள் ஊழியர் வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, 2008ம் ஆண்டு விவகாரம் முற்றிலும் வேறானது. அதையும் இதையும் தொடர்புபடுத்த முடியாது. அமெரிக்காவின் சட்டதிட்டங்களை இந்நிறுவனம் மதித்து நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.