எட்டு வழிச்சாலை... உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால், சேலம்- சென்னை இடையிலான பசுமை வழிச்சாலைக்காக திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பான பொதுநல வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் மக்களின் நிலை புரியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.