நியூயார்க் சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு
2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் காரணமாக சேதமடைந்த நியூயார்க் சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகள் கழித்து பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது.
விமானங்களை கடத்தி அவற்றை உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களின் மீது தீவிரவாதிகள் மோதச் செய்தனர். இத்தாக்குதலில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உலக வர்த்தக மையத்தின் கோர்ட்லேண்ட் தெரு சுரங்க ரயில் நிலையம் மூடப்பட்டது.
இந்த ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1,200 அடி நீளத்தில் இதன் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. 181.8 மில்லியன் டாலர் செலவில் இந்த ரயில் நிலையம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பக்கச் சுவர்களில் அமெரிக்க விடுதலை சாசனம் மற்றும் ஐக்கிய நாடுகளில் மனித உரிமை சாசனம் ஆகியவற்றின் வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
"நியூயார்க் மக்கள் மீண்டெழுந்துள்ளார்கள் என்பதை இந்த ரயில் நிலையம் காட்டுகிறது," என்று நியூயார்க் பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஜோ லோதா கூறியுள்ளார்.