ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகின்றனர்.
குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி, ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப், சமான்கான் மாகாணத்தில் தாரா சுப், சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 37 பேர் உயிரிழந்தனர்.
இந்த சுவடின் வலி மறைவதற்குள், நங்கர்ஹார் மாகாணம் முகமந்த் தாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.
அத்துமீறி செயல்படும் காவல்துறை அதிகாரி பிலால் பாட்சா என்பவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 57 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, முகமந்த் தாரா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.