ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி.தினகரன் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர்.
இடைத்தேர்தல் அன்று, காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 வரையில் நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் மட்டும் 6 மணிக்கும் மேல் வாக்குப்பதிவு நீடித்தது. இறுதியாக, 77.5 சதவீதம் வாக்குப்பதிவானதுஇதன்பின்னர், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டது. மேலும், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன், 14 மேஜைகளில் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணப்படுகிறது.
முதற்கட்டமாக, தபால் ஓட்டு எண்ணப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். நன்பகல் 12 மணியளவில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் யார் என்று தெரிந்துவிடும்.